"அவர் அநேக விஷேசங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்; கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது." (மத்தேயு 13:3-8)
உவமையின் விளக்கம்
விதை என்பது தேவனுடைய வார்த்தை என்றும், நிலம் என்பது நம்முடைய இதயத்தின் நிலை என்றும் இயேசு விளக்குகிறார்.
- வழியருகே (கடினமான இதயம்): பறவைகள் வந்து விதைகளைப் பட்சித்தன. வசனத்தைக் கேட்டும் உணராதவர்களிடத்தில், பொல்லாங்கன் வந்து இதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்கிறான்.
- கற்பாறை (ஆழமற்ற விசுவாசம்): விதை உடனே முளைத்தது, ஆனால் வேரில்லை. வசனத்தைக் கேட்டவுடனே மகிழ்ச்சியோடே ஏற்றுக்கொள்ளுகிறவன், ஆனால் உபத்திரவம் வந்தவுடனே இடறலடைவான்.
- முள்செடி (சிதறிய கவனம்): முள்செடிகள் வளர்ந்து பயிரை நெருக்கின. உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறது, அவனும் கனியற்றவனாவான்.
- நல்ல நிலம் (ஏற்கும் இதயம்): வசனத்தைக் கேட்டு உணருகிறவன்; அவண் நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான்.
முக்கிய பாடம்: தேவனுடைய வார்த்தையை உணர்ந்து ஆவிக்குரிய கனி கொடுக்க நாம் நல்ல நிலமாக மாற வேண்டும். இன்று உங்கள் இதயம் எப்படிப்பட்ட நிலமாக இருக்கிறது?